கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் குப்பைகளை தரம் பிரிக்கும் குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினர் நான்கு வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைகிடங்கில், மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டுவந்து தரம் பிரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சுமார் 100 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட 4 குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று காலை இந்த குடோன்களில் ஒன்றில் இருந்து கரும்புகை வெளியானது. இதனைக் கண்ட அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதற்குள் தீ வேகமாக பரவி, குடோனில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகள் எரிந்து அதிக அளவில் கரும்புகை வெளியாகத் தொடங்கியது. தகவல் அறிந்து உடனடியாக களமிறங்கிய கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினர், 4 வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தும், ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு குடோனை உடைத்தும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.