கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காந்திபுரம், ராமநாதபுரம், சிங்காநல்லூர், விமான நிலையம், விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, கணபதி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மாநகர் பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால், பல பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ், மழைநீர் தேங்கிய நிலையில் தனியார் பேருந்து மழைநீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மின்னல் மற்றும் இடியுடன் கூடிய இந்த மழையால், நகரின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபட்டது. கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் இன்றும் தொடர்ந்து, மழை பெய்து வருகிறது.