கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நிலவிய கடும் வெப்பநிலைக்குப் பிறகு, நேற்றும் இன்றும் மாலை வேளைகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை கோவை மாநகரின் சில பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக பீளமேடு, ரயில் நிலையம், டவுன்ஹால் உள்ளிட்ட இடங்களில் சுமார் அரை மணி நேரம் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதன் காரணமாக, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக மழைநீர் மருத்துவமனை வார்டுகளுக்குள் புகுந்தது. இதனால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நோயாளிகளின் அறைகள் முழுவதும் வெள்ளம் குளம் போல் தேங்கியதால் கீழே இறங்க முடியாமல் தவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீர் தேங்கியதால் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த திடீர் மழையால் நோயாளிகள் சிரமத்தை சந்தித்தனர்.