புத்தகப்பை சுமைக்கு முடிவு கட்டவேண்டும்.. ராமதாஸ்
மாணவர்கள் தங்களுக்கு இணையான எடையுள்ள புத்தகப் பைகளை சுமந்து சொல்லும் கொடுமைக்கு, உடனே முடிவு கட்ட வேண்டும் என, பா. ம. க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அரிசி மூட்டைக்கு இணையான எடை உடைய புத்தகப் பைகளை, பள்ளி மாணவர்கள் சுமந்து செல்கின்றனர். சுமை துாக்கும் தொழிலாளர்களை போல, புத்தகப் பைகளை சுமந்து செல்லும் குழந்தைகள், காலப்போக்கில் முதுகு தண்டு வளைந்து, கூன் விழுந்தவர்களை போல மாறி விடுகின்றனர். தமிழகத்தில் எந்த ஊரை, எந்த தெருவை எடுத்துக் கொண்டாலும், இத்தகைய மாணவர்களை பார்க்க முடியும். குழந்தைகளின் இந்த நிலைமைக்கு, பெற்றோரின் அறியாமையும், தனியார் பள்ளிகளின் பேராசையுமே காரணம். எந்த பள்ளிகள் ஆங்கிலத்தில் கல்வி வழங்குகின்றனவோ, பாடச்சுமை அதிகமாக உள்ளதோ அதுதான் சிறந்த பள்ளி என்ற மாயை தமிழகத்தில் உருவாக்கப்பட்டு விட்டது. அதிக எடை உடைய புத்தகப் பைகளை விட கொடுமை, அவற்றை சுமந்தபடி, 3 - 4 மாடிகள் ஏற வேண்டியிருப்பது தான். பள்ளிக்கு சென்று வந்தபின், முதுகுவலி, உடல்வலி போன்றவற்றால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், அவர்களால் பள்ளிகளில் நடத்தப்பட்ட அன்றைய பாடங்களை படிப்பதோ, வீட்டுப்பாடம் செய்வதோ சாத்தியமாவதில்லை. தங்களுக்கு இணையான எடை உடைய புத்தகப் பைகளை, மாணவர்கள் சுமந்து சொல்லும் கொடுமைக்கு உடனே முடிவு கட்டவேண்டும் என்றார்.