தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என உத்தரவாதம் அளித்த மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமிக்கு விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு இருக்கும் போது மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம். இக்கொள்கையில் உடன்பாடு உள்ள சாதியவாத, மதவாத சக்திகளைத் தவிர அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் விசிகவின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாம்” என தெரிவித்திருந்தார்.
இக்கருத்து அரசியல் அரங்கில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த மதுவிலக்கு துறைஅமைச்சர் முத்துசாமி, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். மதுக்கடைகள் தொடர்ந்து செயல்படுவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பம் இல்லை என கூறியிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக வலைதளப் பக்கங்களில், படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவோம் என அமைச்சர் முத்துசாமி அறிவித்திருப்பது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அவருக்கு எமதுமனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.