திமுக - விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம். ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற எனது பேச்சு பற்றி முதல்வர் எதுவும் கேட்கவில்லை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் இன்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தேர்தலுக்கும் இப்போதைய மாநாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆயிரக்கணக்கான கைம்பெண்களின் கோரிக்கையை முன்னிறுத்தியே இந்த மாநாட்டை நாங்கள் நடத்துகிறோம். இதை திசைதிருப்பும் வகையில் தேர்தல் அரசியலோடு பிணைத்துப் பார்க்க வேண்டாம். மாநாட்டில் பங்கேற்கும்படி முதல்வரிடம் நேரடியாக அழைப்பு கொடுக்கவில்லை. அந்த கோரிக்கை மனுவில் இடம்பெற்றிருந்த தகவலின்படி, ‘உங்கள் கருத்தும் எங்கள் கருத்தும் ஒன்றுதான். அதனால் இருவர் எங்கள் தரப்பில் இருந்து பங்கேற்பார்கள்’ என்று முதல்வர் உறுதியளித்துள்ளார். மற்றபடி திமுக - விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதை நாங்கள் முன்னிறுத்துகிறோம் என அவர் கூறினார்.