சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கப்பட்ட பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு செயல்பட்டுவந்த ஹோட்டல்கள், டீக்கடைகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் வருகை குறைந்து விட்டதால் தற்போது ரவுடிகள், வழிப்பறி கொள்ளையர்கள் மற்றும் குடிமன்னர்கள் ஆகியோர் இங்கு பதுங்கிக்கொள்வதற்கு வசதியாக உள்ளது. இதற்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும் என்று கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றார். இந்த நிலையில், 3வது நாளாக நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பயணிகளை தவிர மற்றவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதனால் ரவுடிகள், குடிமன்னர்கள் ஆகியோர் அங்கிருந்து தப்பிவிட்டனர். இதன்காரணமாக பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பயணிகள் கூறியதாவது: கோயம்பேடு பேருந்து நிலையம் காலியாக இருப்பதால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திருநங்கைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வாலிபர்களை குறிவைத்து பணம் பறிக்கின்றனர். இதுகுறித்து புதியதாக வந்த இன்ஸ்பெக்டர் அருள்மணிமாறனிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆய்வு செய்து வெளியாட்களை விரட்டியடித்தனர்.