கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கைப் பார்க்கும் முதல்வர் மு. க. ஸ்டாலின், அதற்காக வெட்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (செப்.14) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் தொழில்கள் நசிந்து வருவதை அறிந்து, அதை காப்பற்றவே நிர்மலா சீதாராமன் கோவை வந்தார். ஆனால், அவரது முயற்சிகளுக்கு திமுக அரசு எந்த விதத்திலும் உதவி செய்யவில்லை. அதற்கு நேர்மாறாக பிரச்சனையை திசை திருப்பி, மத்திய நிதியமைச்சர் செய்த நல்ல செயல்களை மக்களிடம் இருந்து மறைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார்.
இந்நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அப்போது நடந்த சாதாரண நிகழ்வை, பெரிதாக்கி, அரசியல் ஆதாயம் தேட திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் முயன்று வருகின்றன. கோவையில் தொழில்கள் நசிந்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும், கோவையின் தொழில் வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவி செய்யாத தமிழகத்தின் முதல்வரான மு. க. ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். கொங்கு மண்டலம் திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் மன்னிக்காது என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.