மாவட்டந்தோறும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் மடலில், “பெரியார் மண்ணான தமிழ்நாட்டில், அவர் பிறந்த ஈரோட்டின் கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில், அண்ணாவால் உருவாக்கப்பட்டு, கருணாநிதியால் பேணி பாதுகாக்கப்பட்டு, அவர்தம் தொண்டர்களால் வளர்க்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்ட வி. சி. சந்திரகுமார் உதயசூரியன் சின்னத்திலே வாக்களித்து மகத்தான வெற்றியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். இது திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளித்திருக்கும் மற்றொரு நற்சான்றிதழ்.
இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் தி. மு. கழக அரசின் செயல்பாடுகள் அமைந்திடும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன். எங்கு சென்றாலும் மக்களின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்கிறேன். கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.