கல், மணல் குவாரிகளுக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கண்டித்து சென்னையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கல், மணல், கிராணைட் குவாரிகளுக்கு சட்டவிரோதமாக சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு ஆர்ப்பாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் இன்று (செப்.,19) நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன், தமிழகம் முழுவதும் செயல்படும் கல்குவாரிகள், மணல் குவாரிகள், சுண்ணாம்புகுவாரிகள் போன்ற பெருந்தொழில்கள் அனைத்துக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் என்ற அமைப்புதான் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குகிறது. கோடிகளில் லஞ்சம் பெற்றுக்கொண்டு சுற்றுச்சூழல் அனுமதியை கொடுத்து, தமிழகத்தை பாலைவனமாக மாற்றி வருகின்றனர்.
இப்படிப்பட்ட மோசடியான ஆணையத்தை கலைத்துவிட்டு, லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, சட்டத்தின் படி முறையாக இயங்குபவர்களை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் நியமிக்க வேண்டும். தமிழக அரசு இதுபோன்ற ஊழல் அமைப்புகளை கலைத்திட வேண்டும் என அவர் கூறினார்.