பயங்கரவாத இயக்கத்துக்கு தடையை மீறி ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று( செப். 24) சோதனை மேற்கொண்டனர்.
ஹிஷாப் உத் தஹீரிர் என்ற அமைப்புக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு ஆட்கள் சேர்த்த விவகாரம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பேராசிரியர் உட்பட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். சென்னை சைபர் கிரைம் போலீஸார் முதலில் இந்த வழக்கில் துப்பு துலக்கினர். பின்னர் இந்த வழக்கு என்ஐஏ-வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் 10 இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு இடத்திலும், நாகர்கோயிலில் ஒரு இடம் என தமிழகம் முழுவதும் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஏழு கிணறில் ரகுமான் என்பவர் வீட்டிலும் நீலாங்கரை வெட்டுவாங்கேணியில் முகமது ரியாஸ், சையது அலி ஆகியோர் வீடுகளிலும், ராயப்பேட்டையில் முகமது அலி என்பவர் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
இதேபோல் அடையார் பகுதியில் முகமது ரியாஸ் என்பவர் குடியிருக்கும் வீட்டில் இன்று காலை 6. 15 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதிகாரிகளின் சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.