அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது, வேட்டி சேலைகள் வழங்குதல் மற்றும் நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குதல் ஆகிய இரு சீரிய நோக்கங்களுடன், ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. உண்மைக்கு புறம்பான, அடிப்படை ஆதாரமற்ற,
தேவையற்ற வதந்திகளை பரப்பும் நோக்கத்துடன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, அரசியல் ஆதாயத்துக்காக கண்ணியமற்ற முறையில் செய்திகளை வெளியிடுவது, மாநில அளவில் பொறுப்பில் உள்ள அரசியல் கட்சித் தலைவருக்கு உகந்ததல்ல. தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்யும் வகையில், சிறப்பாக செயல்பட்டு மக்களின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று, நல்லாட்சி செய்து வரும் திமுக அரசின் மீது, வீண் பழி சுமத்தி, களங்கம் ஏற்படுத்த பகல் கனவு காணும் எண்ணம், எந்நாளும் நிறைவேறாது என்பதை உறுதிபட தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.