சென்னையில் எங்கெங்கே மழை நீர் தேங்கியுள்ளது என்றும், கனமழையால் எந்தெந்த சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன எனவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம், வடபழனி மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகே அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. மடிப்பாக்கம் நோக்கி செல்லும் மேடவாக்கம் நெடுஞ்சாலையில் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மறுபுறம் மெட்ரோ ரயில் பணிகளும் நடந்துவருகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி காலை 9 மணி வரை சென்னையில் மொத்தமாக 622.95 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக சனிக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை சராசரியாக 12.62 மி.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற 1,686 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் 137 அதிக திறன் கொண்ட 100 ஹெச்பி பம்புகள் மற்றும் 484 டிராக்டர் பொருத்தப்பட்ட பம்புகள் அடங்கும். 134 இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதில் 8 இடங்களில் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 126 இடங்களில் மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் ஆறு சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.