எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. திறப்புவிழாதான் நடத்தப்பட வேண்டும். இது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். எங்களுடைய அமைச்சர் முத்துசாமியும் அதை தொடர்ந்து கூறி வருவது அனைவருக்கும் தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பயமும் இல்லை என்று கூறுவதெல்லாம் தவறு. அதிமுக அவருடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? என்பதை அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் பேசும் பேச்சுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
எனவே, எடப்பாடி பழனிசாமி கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். சீமான் மீதான அவதூறு வழக்குகளைக் கொண்டு அவரைக் கைது செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தாக வேண்டும். எனவே, இந்த விவகாரத்தில், அவர் நீதிமன்றத்துக்குத்தான் வரவேண்டும். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள் குறித்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதுதொடர்பான வழக்குகள் நடக்கும் என்று கூறினார்.