தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருக்கும் ஆணையின்படி, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசின் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு நிதியாண்டின் ஏப்ரல் மாதத்துக்கான பண வீக்க விகிதம் அல்லது 6 விழுக்காடு இவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
மின்சார வாரியத்தில் நடக்கும் ஊழல்களைத் தான் தடுக்க வேண்டும். வீடுகள், தொழிற்சாலைகள் ஆகிய இரு தரப்புக்கும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.