முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ஆய்வு: ராமதாஸ் கண்டனம்

60பார்த்தது
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு குறித்த ஆய்வு: ராமதாஸ் கண்டனம்
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு ஆணை அளித்துள்ளது தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது மூடி விட வேண்டும் என்று கேரளம் துடித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அம்மாநில அரசின் கோரிக்கையை ஏற்று அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக்குழு ஆணையிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில், பாதுகாப்பு ஆய்வு நடத்துவது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

அணை பாதுகாப்பு சட்டத்தின்படி, 2026-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு ஆய்வு செய்தால் போதுமானது என்பதால், அணைப் பாதுகாப்பு சட்டக் கூறுகளை கடைபிடிப்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது. இது தான் இன்றைய நிலையில் சாத்தியமான தீர்வு ஆகும். எனவே, தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தை அணுகி, கண்காணிப்புக் குழுவின் ஆணைக்கு தடை பெற வேண்டும். மரங்களை வெட்டி, பேபி அணையை வலுப்படுத்திய பிறகு முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ளலாம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றத்திடமிருந்து பெற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி