வெள்ளத்தடுப்பு திட்டங்கள் அறிக்கை வெளியிடாதது ஏன்?: அன்புமணி

62பார்த்தது
வெள்ளத்தடுப்பு திட்டங்கள் அறிக்கை வெளியிடாதது ஏன்?: அன்புமணி
சென்னை வெள்ளத்தடுப்பு திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 13 மாதங்கள் ஆகியும் தமிழக அரசு அதை இன்னும் வெளியிடாதது ஏன்? என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 13 மாதங்களாகிவிட்ட நிலையில், அந்த அறிக்கை இன்னும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை. சென்னை மாநகர மக்களின் மழைக்கால பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆவணத்தை, ஏதோ ரகசிய ஆவணம் போன்று முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

சென்னையின் வெள்ளம் என்பது பெருந்துயரத்தை ஏற்படுத்தும் பேரிடர் ஆகும். அதில் தமிழக அரசு அலட்சியம் காட்டக் கூடாது. எனவே, திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அதுமட்டுமின்றி, திருப்புகழ் குழுவில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு ஏற்றுக் கொண்ட பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தப்பட்ட பரிந்துரைகள் எத்தனை? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நடவடிக்கை அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி