தமிழகத்தில் ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய சட்ட ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறப்பு சட்டம் ஒன்றைத் தமிழக அரசு இயற்றவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில் 2012-ம் ஆண்டு இந்திய சட்ட ஆணையம், 'சட்டவிரோதக் கூட்டம் (திருமண சுதந்திரத்தில் தலையிடுதல்) தடுப்புச் சட்டம்‘ என்ற சட்ட மசோதாவை உருவாக்கியது. ஆனால் அந்த மசோதாவை சட்டமாக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் அதிகார வரம்பின்கீழ் வருவதால் அந்த சட்ட மசோதாவைத் தமிழக அரசு சட்டமாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது நெல்லை சிபிம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தையே சாதி ஆணவக் குற்றவாளிகள் தாக்கிய அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கும் நிலையில், சாதி ஆணவக் குற்றங்களைத் தடுப்பதற்கான சிறப்புச் சட்டம் இயற்றவேண்டும் எனவும், அதுவரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.