
சென்னை: தமிழாசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்; ராமதாஸ்
அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் தனியாக தமிழாசிரியர் பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்க தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்படாததால் தமிழ்ப் படித்த ஆசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் அவர்கள் படித்த படிப்புக்கு சற்றும் பொருத்தம் இல்லாத பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தமிழை வளர்ப்பது தான் தலையாய கடமை என்று கூறும் ஆட்சியாளர்கள், தமிழ்ப் படித்தவர்களுக்கு வேலை வழங்க மறுப்பது பெரும் முரண் ஆகும். அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போலவே தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் தனியாக தமிழாசிரியர் பணியிடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்; தனியார் பள்ளிகளிலும் தமிழ்க் கட்டாயப்பாடமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கும் அரசு மூலம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்; தமிழ்ப் படித்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வேலையின்றி வாடும் தமிழாசிரியர்களுக்கு மாதம் ரூ. 10,000 உதவித் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.