பெரம்பூர்: சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் எதிரே நெடுஞ்சாலையில் ரயில்வேக்கு சொந்தமான 6,800 சதுர அடி நிலம் உள்ளது. இந்த இடத்தை ராஜேந்திரன் உள்பட பலர் ஆக்கிரமித்து வணிக ரீதியாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ரயில்வே இருப்புபாதை போலீசார், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், வழக்கு ரயில்வேக்கு சாதகமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பு வந்தது.
இதையடுத்து அந்த இடத்தை ரயில்வே துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் இருந்தவர்கள் காலி செய்து சென்றுவிட்டனர். முறைப்படி அந்த இடத்தை மீட்க இன்று காலை ரயில்வே இருப்புபாதை டிஎஸ்பி கர்ணன், இன்ஸ்பெக்டர் பத்மநாபன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வந்தனர். பின்னர் 6,800 சதுர அடி இடத்தில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை இடித்து இடத்தை மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் 10 கோடி என்று தெரிகிறது.