தாதுமணல் கொள்ளை வழக்கு அறிக்கைகள் குறித்து பேரவையில் சிறப்பு விவாதம் தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றுள்ள சட்டவிரோத தாதுமணல் கொள்ளை பற்றி விரிவான விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், 16 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளித்துள்ளது. அதில் அரிய தாதுமணல் கொள்ளை நடந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சுரங்க நிறுவனங்கள் இடையிலான தொடர்பை சிபிஐ விசாரிக்க வேண்டுமென்றும் முக்கியமான தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு வரவேற்புக்குரியதாகும். இந்த விஷயத்தில் தொடக்கம் முதலே தீவிரமான தலையீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி வந்துள்ளது. அரிய கனிமங்கள், தாதுமணல் உள்ளிட்ட கனிமவளத் தொழில் மொத்தமும் அரசின் வசமே இருக்க வேண்டும். அப்போதுதான் இயற்கை வளங்களைப் பாதுகாக்க முடியும். தாதுமணல் வருவாய் நேரடியாக அரசிடம் சேர்வது, மக்கள் நலத் திட்டங்களுக்கு உதவிடும். எனவே, இந்த தாதுமணல், கனிமவள தொழில்களை முற்றாக அரசுடைமையாக்கிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.