தமிழகத்தில் தடுப்பணைகள் அமைத்து, தண்ணீரை சேமிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாய மக்களுக்கு தேவையான தண்ணீரை கேட்ட போது கொடுக்காத கர்நாடகா, தானாக முன்வந்து அணைகளை திறந்து தண்ணீரை தந்துள்ளது. இயற்கையின் முன் அனைவரும் சமம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.
ஒரு டிஎம்சி தண்ணீரை தினந்தோறும் தமிழகத்துக்கு தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும், உடன்படாத கர்நாடக அரசு இயற்கை அன்னையின் முன் மண்டியிட்டு உள்ளது. ஒரு டிஎம்சி தண்ணீர் தர மறுத்த போது, ஒரு லட்சம் கண அடி தண்ணீர் திறந்து விடக் கூடிய சூழலை உருவாக்கி, இன்றைக்கு தமிழகத்தின் அனைத்து அணைகளும் நிரம்ப செய்துள்ளது. இதை பார்க்கும் பொழுது அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி நிரூபிக்கப்பட்டுள்ளது.