காங்கிரஸ் மற்றும் கர்நாடகாவின் நலனுக்காக காவிரி விவகாரத்தில் தமிழக உரிமைகளை தாரை வார்க்க, கருணாநிதி வழியில் முதல்வர் மு. க. ஸ்டாலினும் துணிந்துவிட்டார் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில், கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியாரெட்டியை ஆதரித்து பிரச்சாரம்செய்த அம்மாநில முதல்வர்சித்தராமையா, ‘‘மேகேதாட்டுவில் அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டப்படும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் மேகேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று சித்தராமையா அறிவித்து 3 நாட்கள் ஆகியும், அதே கூட்டணியில் இருக்கும் திமுகவின் தலைவர்மு. க. ஸ்டாலின் எதிர்ப்போ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.
2008-ம் ஆண்டு கர்நாடக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸுக்கு பாதிப்பு ஏற்படகூடாது என்பதற்காக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு. க. ஸ்டாலின், இப்போது மேகேதாட்டுஅணை கட்டும் விவகாரத்தில்தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்த துரோகத்துக்கு மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.