சென்னை: வீடு வழங்க வேண்டும் என சிறுமி வைத்த கோரிக்கையை ஏற்று வீடு ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
சென்னை பெரியமேட்டைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சகோதரர் ராஜீவ். அவருடைய மகள் ஹர்சினிக்கு ஹீமோபிலியா எனும் நோய் பாதிப்பு இருந்த நிலையில், அவருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையறிந்த அமைச்சர் உதயநிதி சிறுமியை சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது, ஹர்சினியின் குடும்பத்தினர், வீடற்ற நிலையில் சாலையோரம் வசிப்பதாகவும், சுகாதாரமான வாழ்வுக்கு அரசு தரப்பில் ஒரு வீடு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை அமைச்சர் உதயநிதி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்த நிலையில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சத்தியமூர்த்தி நகர் திட்டப்பகுதியில் ஹர்சினிக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆணையை ஹர்சினியின் குடும்பத்தாரிடம் அமைச்சர் உதயநிதி இன்று வழங்கினார்.