கும்பகோணத்தில் இருந்து திருமணஞ்சேரி வழியாக சீர்காழிக்கு ரூ. 750 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள புதிய நெடுஞ்சாலையை துரிதப்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
மயிலாடுதுறையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வாஞ்சிநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி எம். ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வி்ல் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ். சத்யராஜ் ஆஜராகி, இந்த புதிய வழித்தடத்தில் எந்தவிதமான வனவிலங்கு சரணாலயமோ, காப்புக்காடுகளோ, ரயில்வே மேம்பாலமோ கிடையாது. அதேபோல 100 கிமீ தூரத்துக்கு உட்பட்ட சாலைகளுக்கு சுற்றுப்புறச்சூழல் தொடர்பான தடையில்லா சான்றும் பெற தேவையில்லை.
ஆனாலும் இந்த சாலை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் பல ஆண்டுகளாக தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது, என வாதிட்டார். அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்கணேஷ் இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசம் கோரினார். அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கை 8 வார காலத்துக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.