திருச்சி: பஞ்சப்பூர் மார்க்கெட்க்கு எம்ஜிஆர் பெயர் வைக்க கோரிக்கை
திருச்சி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மாநகர மேயர் அன்பழகன் தலைமையில் துறை மேயர் திவ்யா ஆணையர் சரவணன் முன்னிலையில் இன்று நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர்கள் மேயர் அன்பழகன் தலைமையில் தீண்டாமை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். கூட்டத்தில் பஞ்சப்பூரில் நடைபெற்று வருகின்ற ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரையும், அதேபோன்று பஞ்சப்பூரில் அமைய உள்ள சரக்கு முனையத்திற்கு அண்ணா பெயரை சூட்டுவதற்கான கருத்துரு அனுப்பி வைத்ததை குறித்து மேயர் அறிவித்தார். தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி பேசுகையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு சரக்கு முனையத்திற்கும் கருணாநிதி பெயரையும் அண்ணா பேரையும் வைத்தது வரவேற்கத்தக்கது. தொடந்து 15ஆண்டுகள் முதல்வராக இருந்த எம் ஜி ஆரின் பெயரை அங்கு வரவுள்ள மார்க்கெட் அல்லது விளையாட்டுத் திடலுக்கு வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு மாமன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் கோரிக்கையாக முன் வைத்து வருகின்றனர்.