அரியலூரில் போராட்டத்தில் குதித்த பெண்கள்: போலீசார் குவிப்பு

3305பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மேலணிக்குழி குடிகாடு கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தூர்வாரும் பணிகளில் மணல் கொள்ளை நடப்பதாகவும், விவசாய நிலத்திற்கு பாதை வசதி மற்றும் மலட்டு ஏரி அருகே மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை பலமுறை வைத்தும் அரசு நிறைவேற்றவில்லை.

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றாததால், ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு, இன்று காலை மேலணிக்குழி காட்டுமன்னார்கோயில் -குடிகாடு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் இது பற்றி தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய மக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் தந்ததன் பேரில், பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் கோரிக்கைகள் நிறைவேற்ற படா விட்டால் அடுத்த கட்டமாக காலவரை போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி