விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரை அடுத்த
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் சிவராத்திரி அன்று இரவில் தங்கி சாமி தரிசிக்க அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு நாளை மறுநாள் செவ்வாய்கிழமை பிப். 25 முதல் பிப். 28 வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி
தரிசனம் செய்ய வனத்துறையினர், கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலையில் பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி எனவும் இரவு நேரத்தில் பக்தர்கள் கோவிலில் தங்க அனுமதி இல்லை எனவும் வனத்துறையினர் அறிவித்து உள்ளனர். மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பக்தர்கள் மலையேறி செல்ல கூடுதல் நேரம் ஒதுக்க வேண்டும் என்வும், மகா சிவராத்திரி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு நான்கு காலபூஜைகள் நடைபெற உள்ளதால் பக்தர்கள் இரவில் கோவிலில் தங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.