விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடைபெற்ற இயற்கை முறை உணவு பயிலரங்கத்தில் மேயர் சங்கீதா பங்கேற்று பேசினார். சிவகாசியில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சார்பாக இயற்கை முறை உணவுகளின் நுகர்வை அதிகப்படுத்துவதற்காக விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது. கிரியேட் தலைவர் துரைசிங்கம் தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர் ராஜீவ்காந்தி முன்னிலை வகித்தார்.
நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா கலந்து கொண்டு பயிலரங்கத்தை துவக்கி வைத்து பேசுகையில், நாம் அன்றாட வாழ்வில் நவதானிய உணவுகளை சேர்த்துக் கொண்டால் நலமாக வாழலாம். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கி உண்பதால் நம் உடலுக்கு கேடு விளைவிக்கும். நலமுடன் வாழ நாள் ஒரு கீரை நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இயற்கை முறை உணவுகளை நாம் நுகர்வதுடன் நம் பிள்ளைகளுக்கும் சொல்லித் தர வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீரலட்சுமி, மனிதவள மேம்பாட்டு இயக்குனர் விஜயகுமார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜ், நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தில் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.