சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலை பெயரில் போலியாக பட்டாசு பெட்டிகள் தயாரிப்பு.
7 அச்சக அதிபர்கள் மீது வழக்கு பதிவு.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலை கம்பெனி பெயரில் போலியாக பட்டாசு அட்டை பெட்டிகள் தயாரித்த 7 அச்சக அதிபர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
சிவகாசியில் பிரபல பட்டாசு ஆலை கம்பெனி இயங்கி வருகின்றது. இந்த கம்பெனியின் பெயரில் போலியாக பட்டாசு அட்டை பெட்டிகள் தயாரித்து அதில் சட்டவிரோதமாக தயார் செய்யப்படும் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் பரவியது. அதனை தொடர்ந்து அந்த பட்டாசு ஆலையின் நிர்வாகம் சார்பில் சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிவகாசியை சேர்ந்த அச்சக அதிபர்கள் ஜான்சன், அய்யாத்துரை, மருதமுத்துக்குமார், மனோஜ்குமார், ஹரீஸ், ராஜன், ரோகித் ஆகிய 7 பேர் சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை பெயரில் பட்டாசு போலியாக அட்டை பெட்டிகள் தயார் செய்தது தெரியவந்தது அதனை தொடர்ந்து 7 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து ஜான்சன், அய்யாத்துரை, மருதமுத்துக்குமார் ஆகிய 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.