ராஜபாளையத்தை சேர்ந்த இசக்கி முத்து - மருது காளீஸ்வரி தம்பதியின் மூத்த மகன் அருண் கார்த்திக். 5 வயதான சிறுவன் தற்போது ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரது தந்தை மாற்றுத் திறனாளியான இசக்கிமுத்து கூலி வேலை செய்து வருகிறார். சிறு வயதிலிருந்தே ஓடி விளையாடுவதில் தன் மகனுக்கு திறமையும், ஆர்வமும் இருப்பதை பார்த்த இசக்கிமுத்து தனியார் விளையாட்டு கிளப்பின் பயிற்சியாளர் வடிவேல் குமாரிடம் பயிற்சிக்கு அனுப்பி உள்ளார்.
சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் நிற்காமல் தொடர்ச்சியாக ஓடும் திறன் பெற்றதும் உலக சாதனை நிகழ்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தனியார் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் உலக சாதனை நிகழ்வு தொடங்கியது. நோபில் உலக சாதனை அமைப்பின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஓட தொடங்கிய சிறுவன் அருண் கார்த்திக் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் பள்ளி மைதானத்தை 43 முறை சுற்றி வந்தார். 400 மீட்டர் சுற்றளவு உள்ள மைதானத்தில் 2 மணி நேரம் தொடர்ச்சியாக 17. 2 கிலோமீட்டர் தூரம் ஓடி சிறுவன் அருண் கார்த்திக் புதிய உலக சாதனை நிகழ்த்தினார். இவரது சாதனையை ஏற்றுக் கொண்ட அந்த அமைப்பின் பிரதிநிதிகள் சாதனை படைத்ததற்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்களை சிறுவனுக்கு வழங்கி பாராட்டினர்.
மிகச் சிறிய வயதில் இந்த உலக சாதனையை நிகழ்த்திய மாணவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.