
மயிலம் அருகே அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் அசோகன் (56). அரசுப் பேருந்து நடத்துநரான இவர், கடந்த 25-ஆம் தேதி சென்னையிலிருந்து, சேலம் நோக்கிச் சென்ற பேருந்தில் பணியில் இருந்தார். மயிலம் அருகேயுள்ள கேணிப்பட்டு பகுதியில் பேருந்து வந்தபோது, அசோகனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. பின்னர், அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து, பரிசோதித்ததில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அசோகன் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.