மயிலம் அருகே உள்ள சின்ன நெற்குணம் கிராமத்திலுள்ள ஏரியிலிருந்த கருவேல மரங்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன் ஏலம் விடப்பட்டது. அதிக மதிப்புள்ள கருவேல மரங்களுக்கு குறைந்த விலையை நிர்ணயம் செய்துள்ளதாகவும், ஏலத்தை முறைப்படி கிராம மக்கள் அனைவருக்கும் தெரியாமல் ஏலம் விட்டதால், அரசிற்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக கூறி, அந்தப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் சிலர், மாவட்ட கலெக்டர், எஸ். பி. , டி. எஸ். பி. , அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு புகார் மனு கொடுத்தனர். ஏற்கனவே விட்ட ஏலத்தை நிறுத்த வேண்டும் என்று புகார் கூறியும், ஏலத்தை எடுத்தவர் மரங்களை அதிக அளவில் வெட்டி விட்டனர். இந்நிலையில் சின்ன நெற்குணத்தை சேர்ந்த கிராம பொது மக்கள் சிலர், திண்டிவனத்திலுள்ள பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை) அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று பிற்பகல் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பொதுப்பணித்துறை நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மோகன்ராமனிடம் கேட்ட போது, 'மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஏரியிலிருந்த கருவேல மரங்கள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஏலம் விடும் சமயத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தால், ஏலத்தை நிறுத்தியிருப்போம்" என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.