விழுப்புரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு கடந்த 5ம் தேதி மாவட்ட நீதிபதி பூர்ணிமா தலைமையில் செஞ்சி அடுத்த கோணை ஊராட்சிக்கு உட்பட்ட காட்டு கொல்லை கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று(செப்.11) நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மாசி, (48); என்பவர் நீதிபதியிடம், “3 ஆண்டுக்கு முன், வாழப்பாடி அடுத்த அனமேடு கிராமத்தைச் சேர்ந்த குமாரிடம், குடும்ப செலவுக்காக பணம்கடனாக வாங்கினோம். அதை திருப்பிதர இயலாததால், நான், என் மனைவி கோவிந்தம்மாள் மற்றும் மருமகன் ஆகியோர் 3 ஆண்டுகளாக, குமாரின் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்தோம்.
கடன் அடைந்து விட்டதால், கடந்த ஜூன் மாதம் ஊர் திரும்பினோம். கடந்த 1ம் தேதி நான் வெளியூர் சென்றிருந்தபோது வீட்டில் என் மனைவி கோவிந்தம்மாள், அவரது தாயார் மட்டும் இருந்தனர். அப்போது வந்த குமார், எனது மனைவியிடம் இன்னும் கடன் அடையவில்லை எனக் கூறி, அவரை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றுள்ளார். அவரை மீட்டு தர வேண்டும், ”என, கோரிக்கை விடுத்தார்.
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மக்கள் நீதிமன்ற நீதிபதி ரகுமானுக்கு, மாவட்ட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், எஸ். பி. , தீபக்சிவாச்சிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. தனிப்படை போலீசார், அனமேடு கிராமத்துக்கு கடந்த 6ம் தேதி சென்று கோவிந்தம்மாளை மீட்டு சொந்த ஊரான காட்டுக் கொல்லையில், அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.