விழுப்புரம், மந்தக்கரையை சேர்ந்தவர் சையது மாலிக், 30; இவர், விழுப்புரம், செஞ்சி சாலையில் உள்ள டீ துாள் நிறுவனத்தில் சேல்ஸ் மேனாக பணிபுரிகிறார். இவர், மேல் வீட்டிலும், இவர் தந்தை சையது ரஷித் கீழ் வீட்டிலும் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் சையது மாலிக் கீழ் வீட்டில் வந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு மேலே வீட்டிற்கு வந்து பார்த்த போது, மூடியிருந்த கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின், உள்ளே சென்று பார்த்த போது, இரும்பு பிரோ திறக்கப்பட்டு அதிலிருந்த மூன்றரை சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1. 20 லட்சம் ஆகும். சையது மாலிக் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து நகை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். நேற்று சம்பவம் நடந்த மந்தக்கரை பகுதியில் விழுப்புரம் டவுன் போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும் படியாக நின்றிருந்த இருவரை பிடித்து, டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள், திருச்சி அருகே ஏரக்குடி பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் மதன்குமார், 27; விழுப்புரத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார், நேற்று இருவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.