வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜய கார்த்திகேயன் ஐஏஎஸ், ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு விஜய கார்த்திகேயன் ஐஏஎஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "வேலூர் மாவட்டத்தில் 23 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட கூடியவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க 26 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. நீர்நிலைகள் அபாயகரமான கட்டத்திற்கு செல்லவில்லை. இருப்பினும் தொடர்ந்து நீர் நிலைகளை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே, பொதுமக்கள் தேவையான விஷயங்களுக்கு மட்டும் வெளியில் செல்ல வேண்டும்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலும், 9384056214 என்ற whatsapp எண்ணிலும் தொடர்பு கொண்டால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் பதட்டம் அடைய வேண்டாம், "என்றார்.