
காவேரிப்பாக்கம்: விவசாயி வீட்டில் திருடிய 6 பேர் கைது..
காவேரிப்பாக்கம் அடுத்த சிறுகரும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 54), விவசாயி. இவர் கடந்த 7-ஆம் தேதி காலை வீட்டைப் பூட்டிக்கொண்டு விவசாய நிலத்திற்குச் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் பின்புறக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் நகை, வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போயிருந்தன. இதுகுறித்து அவர் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா உத்தரவின்பேரில், அரக்கோணம் துணை எஸ்பி ஜாபர்சித்திக் மேற்பார்வையில், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், ராமதுரை மற்றும் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூரைச் சேர்ந்த ரஜினி, சக்திவேல், குமார், கார்த்தி, மற்றொரு குமார், சோபன்பாபு ஆகியோரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 பவுன் நகை, 700 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.