சோளிங்கர்: குளத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை!
சோளிங்கர் நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு பகுதியில் நாரைக்குளம் உள்ளது. இந்தக்குளத்தை கடந்த 30 ஆண்டுக்கு முன்பு குடிநீர் குளமாக அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் குளத்தை சரியாக பராமரிக்க முடியாமல் போனதால் கழிவுநீர் குளமாக மாறி உள்ளது. மேலும் குளக்கரையில் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். குளக்கரை ஓரமாக கழிவுநீர் கால்வாய் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து உள்ளதால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக குளத்திற்கு செல்கிறது. குளத்தில் இருந்து கழிவுநீர் வெளியே செல்ல வழியில்லாமல் தேங்கி உள்ளது. இதனால் தற்போது குளம் பாசி படர்ந்து பச்சை நிறமாக காட்சி அளிக்கிறது. மேலும் கழிவுநீர் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அப்பகுதியில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து குளத்தில் தேங்கி விடுகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் முறையாக கழிவுநீர் வெளியேற கால்வாய் அமைக்க வேண்டும். மேலும் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும். குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.