கடந்த ஜூலை 5-ஆம் தேதி பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் முன்பாக நின்றுகொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலு, அதிமுகவில் இருந்த மலர்க்கொடி, தமாகாவில் இருந்த ஹரிகரன், ரவுடி நாகேந்திரனின் மகனும் காங்கிரஸ் கட்சியில் இருந்தவருமான அஸ்வத்தாமன் உள்ளிட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர். ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க மைத்துனர் புன்னை பாலுவுடன் சேர்ந்து ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடி சதித்திட்டம் தீட்டினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், தன்னிடம் இருந்த ஐந்து சவரன் நகைகளை பொன்னை பாலுவிடம் கொடுத்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய பொற்கொடி உதவியதாக புன்னை பாலு போலீஸ் கஸ்டடியில் வாக்குமூலம் கொடுத்திருந்தார். தொடர்ந்து அவர்களை போலீசார் தேடி வந்தனர்.
இதனை தொடர்ந்து ஆந்திர எல்லையோரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், ஆற்காடு சுரேஷ் மனைவி பொற்கொடியை கைது செய்தனர். இந்தநிலையில், சென்னை அழைத்து வரப்பட்ட அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.