வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே பன்னீர்செல்வம் (65) என்பவர் போட்டோ ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவருக்கு போன் செய்த ஒரு பெண் பிரபல தனியார் ஆன்லைன் நிறுவனத்தின் பெயரை கூறி அதில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு 12 லட்சம் ரூபாய் மதிப்புடைய கார் பரிசாக விழுந்துள்ளதாகவும் உங்களது ஆதார் அட்டை மற்றும் ஓட்டுநர் உரிமத்தை அனுப்புமாறு கேட்டுள்ளார். அவரும் அதை அனுப்பி உள்ளார். மேலும் உங்களுக்கு கார் ஓட்ட தெரியுமா என அந்தப் பெண் அவரிடம் கேட்டுள்ளார். அவர் எனக்கு கார் ஓட்டத் தெரியாது என கூறியுள்ளார்.
இதனையடுத்து அப்படி என்றால் காரின் விலையான 12 லட்சம் ரூபாயை உங்கள் வங்கி கணக்குக்கு ஐந்து நிமிடங்களில் அனுப்புவதாகவும், அதற்கு நீங்கள் 12, 500 ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார்
அதை நம்பிய அவர் அவர்கள் சொன்ன வங்கிக் கணக்குக்கு 12500 ரூபாய் அனுப்பியுள்ளார். பிறகு அரை மணி நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்ட அந்தப் பெண் மாநிலம் விட்டு மாநிலம் பணம் அனுப்பப்பட உள்ளதால் கூடுதல் பணம் கட்ட வேண்டும். மீண்டும் 25 ஆயிரம் ரூபாய் அனுப்பும் படி கூறியுள்ளார்
அதற்கு தன்னிடம் பணம் இல்லை என தெரிவிக்கவே அவர் இணைப்பை துண்டித்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் எஸ்பி அலுவலகத்தில் அளித்த புகார் என் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.