வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் குடியாத்தம் குமரன். இவர் முன்னாள் திமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராகவும் தலைமை கழகப் பேச்சாளராகவும் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த ஆண்டு இவரை கட்சி தலைமை நீக்கியது. இதனையடுத்து திமுகவிற்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளை விமர்சித்து யூடிப், பேஸ்பூக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பேசி சர்ச்சைக்குள்ளாகி வந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பா. ம. க நிறுவனர் ராமதாஸ் குறித்த அவதூறாக பேசியதாக கடந்த சில நாட்களுக்கு முன் ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் குடியாத்தம் குமரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்தந்தப் பகுதி பா. ம. க கட்சியை சேர்ந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர்.
தொடர்ந்து குடியாத்தம் குமரனுக்கு மிரட்டல் வந்ததால் 24 மணி நேரமும் அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் பாமக குறித்தும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறித்தும் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பா. ம. க மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையிலான பா. ம. கவினர் கே. வி. குப்பம் வழியாக இன்று சென்று கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த கே. வி. குப்பம் போலீசார் பேரி கார்டு அமைத்து அந்த கார்களை மடக்கி தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.