வேலூரை பசுமையாக்கும் முயற்சியில் ஆக்சிலியம் கல்லூரி மாணவிகள்

51பார்த்தது
வேலூர் மாவட்டத்தை பசுமையாக்கும் வகையில் காட்பாடியில் உள்ள ஆக்சிலியம் மகளிர் கல்லூரியில் 3000 மாணவிகள் இணைந்து 5 லட்சம் விதைப்பந்து உருவாக்கும் பணியினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், கல்லூரி செயலாளர் முனைவர் மேரி ஜோஸ்பின் ராணி, கல்லூரி முதல்வர் முனைவர் ஆரோக்கிய ஜெயசிலி, பசுமைப் பாதுகாவலர் தினேஷ் சரவணன் மற்றும் மாணவிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

ஆட்சியர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாணவிகள் விதைப் பந்துகளை தயார் செய்து உலர வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய பசுமை ஆர்வலர் தினேஷ் சரவணன், ``இந்த விதைகளை `ஜவ்வாது’ மலைத்தொடரைச் சேர்ந்த பழங்குடியின மக்களைக் கொண்டு சேகரித்தேன். விதைச் சேகரிப்பால் பழங்குடியின மக்களுக்கும் வருவாய் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்தகட்டமாக, வேலூர் மாவட்ட மலைகளைப் பசுமையாக்கும் முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறோம். பரவலாக்கப்படும் விதைப் பந்துகள் முளைத்து மரங்களாக மாறும் என்கிற நம்பிக்கையும், இந்த நிகழ்ச்சியின் மூலமாக விதைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், "தமிழகத்தில் வெயில் அதிகமாக உள்ள மாவட்டம் வேலூர். பல்வேறு வளர்ச்சி பணிகளின் காரணமாக மரங்கள் குறைவாக உள்ள மாவட்டம் எது என்றாலும் வேலூர் தான். மரங்களை அதிகரித்து வேலூரை பசுமையாக உருவாக்குவோம், "என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி