வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கரசமங்கலம் பகுதியில் சமூக செயற்பாட்டாளர் தினேஷ் சரவணன் ஏற்பாட்டில் பனை விதை நடும் பணி நேற்று (செப்.,27) மாலை துவங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மரங்களை வெட்டினால் வனத்துறையினர் கைது செய்து விடுவார்கள். அந்த அளவுக்கு கடுமையான சட்டம் உள்ளது.
பள்ளிப்படிப்பின் காலத்தில் இரண்டாம் வகுப்பில் தமிழ் பாட புத்தகத்தில் பனை மரத்தின் பாட்டு ஞாபகம் வந்ததாகவும், "பனைமரமே பனைமரமே ஏன் வளர்ந்தாய் பனை மரமே என்று கேட்பார். அதற்கு பனைமரம் சொல்லும் நான் வளர்ந்த காரணத்தை நாட்டோரே சொல்வதைக் கேள் படுக்க நல்ல பாயாவேன், பாய் முடைய நாறாவேன், கன்று கட்ட தும்பாவேன், கை கொடுப்பேன், பசித்தோருக்கு பனைபழம் நான் தருவேன்" என்று அதை செய்ததெல்லாம் பாடும் அந்தப் பாட்டின் வரிகளையும் பாடி காட்டினார். அவரின் இந்தப் பாடலுக்கு மேடையில் இருந்த அதிகாரிகளும், பொதுமக்களும் கல்லூரி மாணவ, மாணவிகள் என அனைவரும் கைதட்டினர்