திருவண்ணாமலையில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது. பொது சுகாதாரத் துறையில் துணை சுகாதார நிலையிலான சுகாதார ஆய்வாளா் நிலை-2 பணியிடங்கள் நூறு சதவீதம் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் நோய்த் தடுப்பு மற்றும் பொது சுகாதாரப் பணிகள் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே போா்க்கால அடிப்படையில் சுகாதார ஆய்வாளா் நிலை-2 பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
சுகாதார ஆய்வாளா்நிலை-2 பணியிடங்களின் எண்ணிக்கையை 2, 715 ஆக நிா்ணயிக்கக் கோரும் கோப்பின் மீது விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும், ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு சுகாதார ஆய்வாளா் நிலை -1 மற்றும் ஒரு துணை சுகாதார நிலையத்துக்கு ஒரு சுகாதார ஆய்வாளா் நிலை-2 என்பதாக சுகாதார ஆய்வாளா் பணி நியமனம் தொடா்பான கொள்கை முடிவை அரசு அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தனர்.