திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பாச்சல் காவல் நிலைய ஆய்வாளா் சாந்தி, உதவி ஆய்வாளா் மீனாட்சி தலைமையிலான போலீஸாா் திருவண்ணாமலை - செங்கம் சாலையில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற மினி லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனா். இதில், ரூ. 2. 52 லட்சம் மதிப்பிலான 630 கிலோ எடை கொண்ட புகையிலைப் பொருள்கள் 21 மூட்டைகளில் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்டதாக கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த கவுஷிக், அக்ஷய்குமாா், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முத்து ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் செங்கம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.