செங்கம் அடுத்த கட்டமடுவு ராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலன். இவரது மகன் சிபிராஜ். அதேபகுதியைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை, சூரியா. இவர்கள் மூன்று பேரும் கூலித்தொழிலாளிகள். பயிரைச் சேதப்படுத்தும் வனவிலங்குகளுக்கு நாட்டுவெடிகுண்டுகளைத் தயார் செய்து விவசாய நிலத்தில் வைப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (ஜனவரி 25) ராஜாபாளையம் வனப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சூரியா, சிபிராஜ், ஏழுமலை ஆகிய 3 பேரும் நாட்டுவெடிகுண்டு வைக்கச் சென்றனர். அப்போது திடீரென வெடிகுண்டு பயங்கரச் சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், இவர்களை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து தகவல்களைச் சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். வனவிலங்குகளை வேட்டையாட வைத்த நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.