திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலக வளாக கூட்ட அரங்கில், வேளாண்மை மற்றும் உழவர் துறை சார்பில் வட்டார அளவிலான
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் துணை இயக்குநர் (தணிக்கை) யுவராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விவசாயி கீழ்வெள்ளியூர் தசரதன் பேசுகையில், கீழ்வெள்ளியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. இங்கு புதிய பள்ளிக்கட்டிடம் வேண்டி பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த மாதம் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பள்ளி கட்டிடம் எப்போது கட்டித்தரப்படும் என கேள்வி எழுப்பினார். வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்திலும் தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்திலும் பிரதம மந்திரி வீடு பசுமை வீடு திட்ட பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய இரும்புக்கம்பிகள் மழையால் துருப்பிடித்து வீணாவதை சுட்டிக்காட்டிய அவர் மக்களின் வரிப்பணம் வீணாவதை அரசு வேடிக்கை பார்க்கிறதா எனவும் வினவினார்.
பதில் அளித்துப் பேசிய துணை இயக்குனர் தணிக்கை யுவராஜ், கீழ்வெள்ளியூர் பள்ளிக்கட்டிடம்
விரைவில் கட்டித் தரப்படும் என உறுதியளித்தார். பசுமை வீடு பிரதமர் வீடு திட்ட பயனாளிகள் அவர்களது சூழ்நிலை காரணமாக வாங்க வராததால் கம்பிகள் அவர்களுக்கு வழங்கப்படும் அதுவரை வேறு இடத்தில் மாற்றி வைக்கப்படும் என கூறினார்.