திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்கள், பொதுமக்கள் சுப நிகழ்வுகளை நடத்தும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஸ்ரீ வேங்கடவன் அரங்கம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா இன்று விமர்சையாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக கன்றுடன் கூடிய கோமாதா அரங்கத்தினுள் எழுந்தருளுதல் நிகழ்வும், அதன் தொடர்ச்சியாக சிறப்பு வேள்வியும் நடைபெற்றது. இதையடுத்து முதல் திருமண நிகழ்வாக ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. முன்னதாக கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு வேள்வியுடன் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் பல்லக்கில் உலா வந்து அரங்கத்தில் உள்ள அரியாசனத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து கங்கணம் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி மங்கள வாத்தியம் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.