திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் இன்று தொடங்கியது.
சங்கத்தின் மாவட்ட தலைவர் ராணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை அகவிலைப்படி நிலுவைத் தொகை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் இளைஞர்களுக்கு காலமுறை ஊதிய நடைமுறையில் பணி வழங்கி நிரப்பிட வேண்டும். முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மாநில துணைத்தலைவர் அம்சராஜ் துவக்க உரையாற்றி போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். சங்கத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். முன்னதாக போராட்டத்தின் துவக்கமாக தமிழ்நாடு நெடுஞ்சாலை ஊழியர் சங்கம் சார்பில் தப்பாட்டம் வாத்தியங்கள் முழங்க போராட்டம் துவங்கப்பட்டது.