36 ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பல்லடம் போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை கூத்துப்பட்டறை நடிகர்கள் இணைந்து சாலை விதிகளை கடைபிடிக்காமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்லடம் பேருந்து நிலையம் முன்பு விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.
இந்த விழிப்புணர்வு நாடகத்தில் செல்போன் பேசிக்கொண்டு செல்வதால் ஏற்படும் பாதிப்புகள், போக்குவரத்து காவல்துறையின் சாலை விதிகளை பின்பற்றாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள், உடலில் காயங்கள் ஏற்படுவது போன்று தத்ரூபமாக சென்னை கூத்துப்பட்டறை நடிகர்கள் நடித்துக் காட்டினர். சாலை விபத்துகளில் சிக்கி ஒருவர் உயிரிழப்பதன் காரணமாக ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படுவது குறித்தும் நாடகமாக அரங்கேற்றப்பட்டது. மேலும் சாலை விபத்துகளால் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் போல வேடமணிந்த ஒருவர் தலைக்கவசம் அணிவது குறித்தும், கார்களில் சீட் பெல்ட் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி, தலைக்கவசம் அணியாதவர்களை அணிய வலியுறுத்தினார்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற தத்ரூபமான நாடகத்தை சாலையில் சென்ற பொதுமக்கள் உண்மையான விபத்து என பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் காவலர்கள் பொதுமக்கள் சாலை விதிகளை மதிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.